வழி நடத்தியவர் : திருமதி. ஸ்ரீவித்யா
நாள்: 13/4/2019 நேரம் பிற்பகல் 2.00-4.00
இடம் : சிபிசி, சென்னை
இப்படி ஒரு பதிவை என் புலனப் பக்கத்தில் (WhatsApp page) கண்டதும் துள்ளிக் குதிக்க மனம் துடித்தாலும்
வயதும், உடல் எடையும் முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டன!
மிகுந்த ஆர்வத்துடன் அரங்கத்துள் நுழைந்தவுடன் நான் கண்டது மகா கவி பாரதி சொன்னதைப் போல "நிமிர்ந்த
நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச்செருக்கும்” கொண்ட ஓர் பெண்மணி நாற்காலியில் அமர்ந்து
சிலருடன் பேசிக்கொண்டிருந்ததைத்தான்!
சற்று நேரத்தில் அணங்குகள் நிறைந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியது. டாக்டர் செல்வி அனைவரையும் வரவேற்று
திருமதி ஸ்ரீவித்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.
டாக்டர் ஸ்ரீவித்யாவின் பன்முக ஆளுமை வியக்கத்தக்க வகையில் இருந்தது. புற்றுநோய் மையத்தின் குழந்தைகள்
பிரிவு மற்றும் 'புத்தி மருத்துவமனை ' இரண்டிலும் சரியான உணவுவகைகள் குறித்த மூத்த ஆலோசகராக பணியாற்றி
வருகிறார். ஸ்டான்ஃபோர்டு மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம் இவற்றில் ஏழு வருடங்களாகச் செயல்பட்டு
வருகிறார். Quest Diagnostics என்னும் நிறுவனத்தில் நான்காண்டுகள் பணியாற்றிய அனுபவமும் உண்டு. இளங்கலை
மற்றும் முதுகலை பட்டங்களை அமெரிக்காவில் பெற்றவர். இறுதியாக 'சிறுதானியங்களின் சத்து மற்றும் உடல் எடைப்
பராமரிப்பில் அவற்றின் பங்கு' என்பது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது!
நிகழ்ச்சி டாக்டர் திவ்யா மற்றும் குமாரி. ப்ரினி இருவரின் நடனத்துடன் தொடங்கியது. "உணவே மருந்து" எனும்
பொருளில். நம் பாரம்பரிய உணவுகளின் தனிச் சிறப்பையும், வாழை இலையில் பரிமாறி உண்ணுவதில் கிடைக்கும் நன்மைகள்
பற்றியும் மிக அழகாக எடுத்துச் சொல்லிய விதம் கண்களுக்கும், காதுகளுக்கும் ஒருசேர விருந்து படைத்தது என்றால்
அது மிகையாகாது!
அடுத்து டாக்டர் ஸ்ரீவித்யாவின் உரை துவங்கியது. அந்த உரையிலிருந்து நான் தெரிந்துகொண்ட தகவல்களை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவற்றைக் கீழே ஒரு பட்டியலாக கொடுத்திருக்கிறேன்.
- பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் சாப்பிட்டுவந்த உணவு வகைகள் நம் உடலில் உள்ள மரபணுக்களால்
இனம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை.ஆகையால் நாமும் நம்
தாத்தா பாட்டி சாப்பிட்ட உணவு வகைகளை தயக்கமின்றி தைரியமாக சாப்பிடலாம்.
- 40 விழுக்காடு மாவுச்சத்து (Carbohydrates), 40 விழுக்காடு புரதம் (Proteins), 20 விழுக்காடு
கொழுப்பு/எண்ணெய், நெய் (Fats) கலந்த சமச்சீர் உணவே (Balenced Diet) மிகச் சிறந்தது.
- இறைச்சியை மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்தபிறகே சமைக்க வேண்டும். சிக்கன்,
மட்டன், பீஃப் போன்ற தசைப்பகுதிகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, குடல், மூளை போன்ற உறுப்புகளைத்
தவிர்க்கவும்.
- சோறு, ரொட்டி போன்றவற்றின் அளவைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்
அதிகம் உண்ணலாம்.
- பழங்களை சாறு பிழிந்து குடிப்பதை விட பழமாகவே சாப்பிடலாம்.
- உடலின் அமிலத்தன்மையைக் குறைத்து சமன் செய்ய காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சை சாறு
கலந்து அருந்தலாம்.
- பாதாம் பருப்பு, வால்நட், முந்திரிப் பருப்பு, பேரீச்சம் பழம், அத்திப் பழம், உலர்ந்த திராட்சை இவற்றை
தினந்தோறும் அரைக்கோப்பை அளவு எடுத்துக் கொள்ளலாம்.
- தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் பயன்படுத்தலாம்.
- இரவு உணவை 7.30/8.00 மணிக்குள் சாப்பிட்டுவிடவேண்டும்.
- பால் அருந்துவதைக் குறைத்துக் கொண்டு தயிர், மோர், பனீர், சீஸ் பயன்படுத்தலாம்.
- மன அழுத்தத்தை குறைக்க பாட்டு, நடனம், ஓவியம் வரைவது போன்ற ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு மேற்கொள்ளலாம்.
- தினந்தோறும் யோகா, தியானம் ,சூரிய ஒளி படும்படி அரைமணி நேரம் நடத்தல் என்று உடற்பயிற்சி செய்வது
அவசியம்.
- காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். செரிமானம் (Digestion) நம் வாயிலேயே ஆரம்பித்து விடுகிறது.
நன்கு மென்று உமிழ் நீருடன் நன்கு கலந்து பிறகுதான் விழுங்க வேண்டும்.
என்னால் இயன்றவரை பதிவு செய்திருக்கிறேன்!
உரை முடிவுற்ற பின் கேள்வி நேரம் தொடங்கியது. அனைவரின் சந்தேகங்களுக்கும் விரிவாகவும்
தெளிவாகவும் விடையளித்தார் ஸ்ரீவித்யா.
பின்னர் ஸ்ரீவித்யா அவர்களுக்கு நினவுப் பரிசாக ஆர்த்தி அவர்கள் வரைந்த ஓர் அழகான ஓவியம்
வழங்கப்பட்டது!
கீதா அவர்களின் நன்றியுரைக்குப் பின் நிகழ்ச்சி அசத்தலான, அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான இறுதிக்
கட்டத்தை எட்டியது! துள்ளலான, துடிப்பான இசை முழங்கத் துவங்கியது! நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பெண்களும்
உற்சாகம் பொங்க
உத்வேகத்துடன் நடனமாடத் தொடங்கினர்! கைகளைக் கோர்த்துக்
கொண்டும், கால்களால் தாளமிட்டுக் கொண்டும் இடுப்பை வளைத்து, கழுத்தை அசைத்து கண்கள் மின்ன மகிழ்ச்சிப்
புன்னகை ஒளிவீச ஆடிய மங்கையர் சற்று நேரத்தில் சிரித்தபடியே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்!
பின்னர் அனைவருக்கும் சுண்டல், இனிப்பு, காப்பி, டீ எல்லாம் வழங்கப்பட்டன! அடடா! நிகழ்ச்சி முடிந்து விட்டதே
என்ற வருத்தத்துடனும், இனி மீண்டும் எப்போது? என்ற வினாவுடனும்
அனைவரும் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பத் தலைப்பட்டோம்!
- திருமதி. சீதா ராமச்சந்திரன்
|